சென்னை:ரியர் அட்மிரல் எஸ். வெங்கட் ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதி கமாண்டிங் பாதுகாப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்த ரியர் அட்மிரல் புனித் சதா தேசிய மாணவர் படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்க டெல்லிக்குச் செல்கிறார்.
ரியர் அட்மிரல் வெங்கட் ராமன், இந்திய கடற்படை பணியில் 1990 ம் ஆண்டு இணைந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாசலா, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, வெலிங்டன் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். வெங்கட் ராமன் தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்களில் நிபுணர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்களில் பல்வேறு பணிகளில் இருந்துள்ளார். அவரது கடல் பணிகளில் சிறந்த போர்க்கப்பலான ஐ.என்.எஸ் தபார் மற்றும் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விராட் ஆகியவை அடங்கும். அவரது குறிப்பிடத்தக்க நியமனங்களில் கடற்படை தகவல் தொடர்பு அதிகாரி வெஸ்டர்ன் ஃப்ளீட் மற்றும் கடற்படை தலைமையகத்தில் கடற்படை புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவராக பதவி வகித்த காலம் ஆகியவை அடங்கும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் பாதுகாப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன், அவர் கோவா கடற்படைப் போர்க் கல்லூரியின் கமாண்டன்டாக பணியாற்றினார். அவருக்கு 2019 இல் விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.