சென்னை: சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் 2 காவலர்கள் பணியில் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? சென்னைவாசிகளில் யாரும் இந்த காட்சியை காணாமல் கடந்திருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில், விட்டால் போதும் என இலக்கு நோக்கி பாயும் நமக்கு, இந்த காவலர்கள் ஏன் இங்கு நிற்கிறார்கள் என தெரியுமா? சமீபத்தில் வெளியான டாணாகாரன் திரைப்படத்தில் வேப்பமரத்திற்கு காவல் போடுவது போன்று, இந்த காவலின் பின்னாலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.
2012ம் ஆண்டு நபிகள் நாயகம் குறித்த ஒரு திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உலகமெங்கும் இஸ்லாமியர்கள், அமெரிக்க தூதரகங்கள் முன்பு போராட்டம் நடத்தினர். சென்னையிலும் பல ஆயிரக்கணக்கானோர் அணி அணியாக திரண்டு போராட்டம் நடத்தினர். அமெரிக்க துணை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இதன் உச்சமாக தூதரகத்தின் மீது கல் எறியப்பட்டது, ஜன்னல்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டார். அமெரிக்க துணை தூதரகத்தின் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன. அன்றைய தினம் முதல் தற்போது வரை அந்தப் பாலத்தின் மீது எப்போதும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாகத்தொடர்ந்து அங்கே வெயில், மழை, குளிர் என காலநிலை பாராது காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாலத்தில் நிற்க வைக்கவே 25 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் சுழற்சி முறையில் அங்கே நிற்கிறார்கள்; நிற்க வைக்கப்படுகிறார்கள். கடந்து சென்ற 10 ஆண்டுகளில் இந்த காட்சியில் எந்த மாற்றமும் இல்லை.
உச்சிவெயிலில் பந்தோபஸ்து யாருக்கு... யாருக்கோ?:இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், 'தொடர்ந்து பாலத்தின் மீது ஒரே இடத்தில் வெயிலின் தாக்கத்தில் நிற்பது மிகவும் கடுமையானதாக இருக்கிறது. ஆண்டுதோறும் வெயில் காலத்தில், பாலத்தின் மேல் நிற்பதில் விலக்கு அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையத்திடம் கோரிக்கை வைப்போம். அவர்களும் மேலிடத்தில் ஒப்புதல் பெற்று காவலர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுப்பர். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் தொடக்கத்திலேயே வெயில் 38 டிகிரி செல்சியஸை தொட்டுவிட்டது. இதனால், சென்னை காவல் ஆணையர் கொஞ்சம் மனது வைத்து, முன் கூட்டியே விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்' என்கிறார் வேதனையுடன்.