தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயார் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் - ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இயங்க சென்னை மெட்ரோ தயார்

சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இயக்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தயார் நிலையில் சென்னை மெட்ரோ
தயார் நிலையில் சென்னை மெட்ரோ

By

Published : May 27, 2020, 7:34 PM IST

Updated : May 27, 2020, 9:06 PM IST

கரோனா தொற்று பரவலை தொடர்ந்து அனைத்து விதமான போக்குவரத்தும் முடக்கப்பட்டது. தற்போது ஒரு சில போக்குவரத்து சேவைகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பேருந்து, மெட்ரோ ரயில் சேவையை தவிர அனைத்து போக்குவரத்து சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்கு, கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் போக்குவரத்து வசதியில்லாததால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். மே 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இருப்பினும், மெட்ரோ ரயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், அரசு அனுமதி வழங்கினால் உடனடியாக சேவை தொடர முடியும் என்று சென்னை மெட்ரோ ரயில் அலுவலர் ஒருவர் கூறினார். குறைவான பயணிகள், அகலமான இடம் போன்ற வசதிகள் உள்ளதால் மற்ற போக்குவரத்தைவிட மெட்ரோ ரயிலை தகுந்த இடைவெளி, கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகள் பின்பற்றி இயக்குவது மிகவும் எளிது என்றும் அவர் கூறினார்.

மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டாலும் ஒரே ஒரு வாயில் வழியாக மட்டும் பயணிகள் வந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது சென்னையில் விமானங்கள் வந்து செல்லும் நிலையில் விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளுக்காக ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை இருந்தால் பல்வேறு இடங்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் செல்ல முடியும் என பயணிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, முழுவதுமாக குளிரூட்டப்பட்ட வசதியுடன் மெட்ரோ ரயில் இயங்கும் என்பதால் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதையும் படிங்க: சேலத்தில் விமான சேவை தொடக்கம்

Last Updated : May 27, 2020, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details