சென்னை காமராஜர் சாலை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம். இவர், கடந்த 6ஆம் தேதி ஆட்டோவில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை, அவரது மனைவி பிரபா 8 ஆம் தேதி கிளைச்சிறையில் பார்த்து வந்த நிலையில், 10ஆம் தேதி சந்தேகத்துக்கிடமான முறையில் மகாலிங்கம் உயிரிழந்தார்.
தனது கணவர் மரணமடைந்த காரணம் குறித்து, தனக்கு சரியான விவரங்கள் கூற மறுப்பதாக குற்றஞ்சாட்டிய பிரபா, நீதிமன்றத்தை நாடினார். அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், மாஜிஸ்திரேட்டு மோகனாம்பாள் முன்னிலையில் மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மகாலிங்கம் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் இருவரோடு, மேலும் இரண்டு மருத்துவர்கள், புகார்தாரர் தரப்பு மருத்துவர் என, 5 பேர் முன்னிலையில் நேற்று முன்தினம்(டிச.28) மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. காலை 11.30க்குத் தொடங்கி நண்பகல் 1 மணிக்கு முடிந்த இந்த மறு உடற்கூராய்வு வீடியோவாகவும் பதிவுசெய்யப்பட்டது.
தன் கணவரை கிளைச்சிறையில், சந்திக்கும்போது அவருடைய தாடை, வாய் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தாக்கியதால் ஏற்பட்ட வடுக்களை தன்னிடம் காட்டியதாகவும், கணவரின் மரணத்திற்கு நீதி கிட்டும்வரை ஓயமாட்டேன் எனவும் மகாலிங்கத்தின் மனைவி பிரபா தெரிவித்துள்ளார்.
உடற்கூராய்வு குறித்துப் பேசிய புகார்தாரர் தரப்பு மருத்துவர், இந்தியாவிலே முதன்முறையாக 5 மருத்துவர்கள், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இந்த உடற்கூராய்வு நடைபெற்று இருக்கிறது. முதல் உடற்கூராய்வு அறிக்கையில் மகாலிங்கம் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படாதது மிகப்பெரிய குளறுபடி. விவரமான அறிக்கையை தயார் செய்து விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறேன்" என்றார்.
கிளைச் சிறையில் மகாலிங்கம் உயிரிழந்தது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவது ஒருபுறம் இருக்க மறு உடற்கூராய்வு அறிக்கை இந்த வழக்கில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர் மரணம்! மறுஉடற்கூராய்வுக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்க உத்தரவு