சென்னை:தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் RCH திட்டத்தின்கீழ் பணிபுரிந்துவரும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி, கொட்டும் மழையிலும் அரசின் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'விடியல் அரசு, எங்கள் வாழ்வில் விடியல் தருமா?':
மேலும் விடியல் அரசு எனக்கூறும் திமுக தங்கள் வாழ்விலும் விடியலை ஏற்றி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய Reproductive and Child Health (RCH) திட்டத்தின்கீழ் ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.
சுகாதார துப்புரவுப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர், சாந்தி பேட்டி கொட்டும் மழையில் போராட்டம்:
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் கொட்டும் மழையிலும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது முழக்கங்களை எழுப்பிய இவர்கள், தங்களுக்குப் பணிநிரந்தரம் வேண்டுமெனவும், ஏழு ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் தங்களுக்கு ரூ.1500 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது என்றும்; இதனை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
பல கோரிக்கைகள்:
மேலும் ஊதியத்தை மாநில அரசு நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்திற்கு நிகராக உயர்த்திட வேண்டும் எனவும், வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற விடுப்புகளையும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ வசதியையும் வழங்கிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
பணியிடங்களில் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு கௌரவமான முறையில் பணியாற்றும் வகையில் பணிச் சூழலை உருவாக்கிட வேண்டும் என்றும்; இலவசப் பேருந்து பயண அட்டையை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச். ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாந்தி வேண்டுகோள் விடுத்தார்.