சென்னை: தமிழ்நாட்டில் மின்பழுது மற்றும் மின்கசிவினால் மின்விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16(2A)ன் படி புதிய வழியை தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி, புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்சிடி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், நடப்பு மழைக்காலங்களில் அதிகரித்துவரும் மின்விபத்துகள் மற்றும் அதன் காரணத்தால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்சிடி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை அவரவர்கள் மின்னிணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில மழைக்கால மாதங்களில் பல வகைகளில் மின்விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சில வயதான தம்பதியர் தற்செயலாக அடுக்குமாடி வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை (Gate) திறக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.