சென்னை: சென்னை தியாகராய நகரில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டத் தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.
இதனடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மாம்பலம் காவல் துறையினர், அவரை கைது செய்தனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணியன் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, மணியனின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும், தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மணியன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.