கரோனா தொற்று மாநில பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கரோனா தொற்று காரணமாக மற்ற அனைத்து துறைகளைவிட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தாகவும், இவை அதிகம் உள்ள மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இந்த பாதிப்பு தெளிவாக தெரிவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் 10.6 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 73 லட்சம் நபர்களுக்கு வேலை அளித்து நாட்டில் வேலைவாய்ப்பு அடிப்படையிலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக கூறியுள்ளது.
கரோனா பாதிப்புக்கு அரசு சார்பில் 1064 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பிணையில்லா கடனாக 125 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை தயார் செய்யும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடங்கப்பட்டால் அவற்றுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், ஐந்து நிறுவனங்கள் இதற்கு முன் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அவசர கடன் உறுதித் திட்டத்தின் கீழ் 6,980 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாடு நிறுவனங்களுக்குத்தான் இரண்டாவது அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெருந்தொற்றால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய ரிசர்வ் வங்கி சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
நஷ்டத்தை சந்தித்த சிறு, குறு நிறுவனங்கள் 56 தொழில் நிறுவனங்களும், 15 மாவட்டத்தைச் சேர்ந்த 10 தொழில்துறை கூட்டமைப்புகளும் கலந்துகொண்ட இந்த கணக்கெடுப்பில், மே 6ஆம் தேதி பகுதி அளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தங்களது தொழில் மீட்சி பெறவில்லை என 10இல் 7 தொழில்துறை கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன. ஊரடங்கு காரணாக ஏற்கெனவே பெற்ற ஆர்டர்கள் குறைக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன மற்றும் புதிய ஆர்டர்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் தொழில் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொழில்துறை கடும் பாதிப்பு சந்தையில் விற்பனை குறைந்து அதன் தொடர்ச்சியாக தேவை குறைந்ததால் தங்களுக்கான ஆர்டர்கள் பாதிக்கப்பட்டதுள்ளதாகவும், ஆர்டர்கள் இல்லாததே மிகப்பெரிய பிரச்னையாக பார்ப்பதாகவும் கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவனங்கள் கூறியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, ஏற்கெனவே வழங்கப்பட்ட பொருட்களுக்கு பணம் கிடைக்காதது மிகப்பெரிய பிரச்னையாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கூறியுள்ளன. வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து செல்வது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இருப்பினும் தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இவை வருங்காலத்தில் சீரடையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம்தான் - நிர்மலா சீதாராமன்