'கோவிட் 19' மருத்துவத் துறைக்கான அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன: ரவீந்திரநாத் - Chennai Covid 19 Notices for Medical Departments
சென்னை: 'கோவிட் 19' மருத்துவத் துறைக்கான அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கோவிட் 19 தொடர்பாக, ரூ. 15 ஆயிரம் கோடி மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு என அறிவித்துள்ளார். இது யானை பசிக்கு சோளப் பொறி வழங்கியதுபோல் உள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 15 ஆயிரம் கோடியில் 7,774 கோடி ரூபாய் தற்போதைய செலவுக்காகவும், மீதமுள்ள பணத்தை வரும் அடுத்த நான்கு வருடங்களில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது உடனடி தேவைக்கு எவ்வாறு பயனளிக்கும்?
தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, மருத்துவத் துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இதை பெரிய சாதனையாக அவர் கூறியுள்ளார். இச்சட்டத்திருத்தம், தொற்று நோய் காலக்கட்டத்தில், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 40 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு 20 லட்சம் பாதுகாப்பு கவசங்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது. ஆனால் , இதுவரை கடந்த 2 மாத காலங்களில்,வெறும் 51 லட்சம் பாதுகாப்பு கவசங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. போதிய பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்படாததால் மருத்துவப் பணியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு, கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, உடனடியாக போதிய தரமான பாதுகாப்பு கவசங்களை வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவத் துறையை நவீனப்படுத்த, அரசு மற்றும் பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு, உடனடியாக சிகிச்சை வழங்க தேவைக்கேற்ப கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க எந்த அறிவிப்பும் இல்லை. ஆகவே 'கோவிட் 19' மருத்துவத் துறைக்கான அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பாதுகாப்புக் கவச உடைகளை வழங்கிடுக - மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!