சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (அக் 04) சேலத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்த கூட்டணி முறிவு என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவல்ல, ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களுடைய முடிவு" என கூறியிருந்தார்.
தேர்தல் கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக ஒரு பக்கம் கூறி வர, மீண்டும் கூட்டணி தொடருமா மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், மாநிலத் தலைவர் இல்லாமல் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், தமிழக பாஜக துணைத்தலைவர், அமைப்புச் செயலாளர்கள் என பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசன் இன்றைய (அக் 04) செய்தியாளர் சந்திப்பில், "என்னது நேற்று கமலாலயத்தில் கூட்டம் நடைபெற்றதா? என்ன கூட்டம்? எனக்குத் தெரியாதே" என ஆச்சரியத்துடன் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துவிட்டு, "பாஜக-வின் ஒவ்வொரு நகர்வுகளையும் வெளிப்படையாக ஊடகங்களுக்குக் கூறுவோம்" என தெரிவித்த வானதி சீனிவாசன், அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு மட்டும் பதிலளிக்காமல் அங்கிருந்து சிரித்தபடியே நகர்ந்து சென்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, நேற்று (அக் 03) கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, "அனைவரும் மகிழ்ச்சியடையும் முடிவு வெளியாகும். அதற்காகத்தான் பெரியவர்கள் எல்லாம் பேசி வருகிறார்கள்" என தெரிவித்த அவர், "கூட்டணி நிச்சயமாகத் தொடரும்" என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் குழப்பத்தைக் கிளப்பியிருக்கிறது.