சென்னை: இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை நேற்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் முல்தான் நகரில் தொடங்கியது. இதன் முதல் போட்டியாக நேபாளம் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாள அணி 23.4 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி நேபாள அணியை வீழ்த்தி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி கடும் சவால் அளிக்கும் அணியாக இருக்கும் என இந்திய சூழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சச்சின் சாதனையை முறியப்பார் ரோகித் சர்மா? - ஆசிய கோப்பையில் ஒளிந்துள்ள ரகசியம்!
இது குறித்து இந்திய சூழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் "ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் எனத் தோன்றுகிறது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அவர்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக திகழும்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்கள் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு கடும் போட்டியாளராக மாறியுள்ளனர். பாகிஸ்தான் அணி 5-6 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிய கோப்பை அல்லது உலக கோப்பைக்கு வரும் போது அவர்கள் சற்று தடுமாறினர். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் 90களில் மற்றும் 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக இருந்துள்ளது. ‘டேப் பால்’ கிரிக்கெட் விளையாடுவதால் வேகபந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடுவதே பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அவர்கள் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி உள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான் லீக் போட்டிகள் மற்றும் பிக்பாஷ் லீக் ஏலத்தில் கிட்டதட்ட 60 முதல் 70 பாகிஸ்தான் வீரர்கள் பதிவாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் விளையாடுகிறார்கள். அதனாலேயே பாகிஸ்தான் அணி பெரிய போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது" என கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Asia Cup 2023: வெற்றியுடன் ஆசிய கோப்பையை தொடங்கிய பாகிஸ்தான்!