சென்னை:எழும்பூர் ராஜரத்தினம் திடலில் அகவிலைப்படியை வழங்க கோரி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்ட கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தங்கள் அலுவலக கடிதத்தின்படி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 20200ஆம் ஆண்டு ஜன 01ஆம் தேதி முதல் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உரியவற்றை உரித்தாக்குகின்ற உன்னதமான பணியினை மேற்கொண்டு வருபவர்கள் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஜன 01ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பதிவாளர் அலுவலக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்.08ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக்கோரிக்கையில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி குறித்தான எந்தவொரு அறிவிப்போ, சுற்றறிக்கையோ தெரிவிக்கப்படவில்லை என நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (மே 13) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கிடங்கிலிருந்து வரும் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கும் நியாய விலை கடை பணியாளர்கள் மீது தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தரமற்ற அரிசியை கொள்முதல் செய்து வழங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.