ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின்படி பொருள்களை பயோமெட்ரிக் முறையில் வழங்க இயலாத பட்சத்தில் OTP முறையில் உறுதிசெய்து பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து கூட்டுறவு, மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் தமிழ்நாடு அரசு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை 32 மாவட்டங்களில் 01.10.2020 முதல் அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள ஆறு மாவட்டங்களில் 16.10.2020 அன்று இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி, பொருள்களைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கான பொருள்களை கைவிரல் ரேகை படிப்பி அங்கீகரித்தல் மூலம் பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அவ்வாறு விநியோகம் செய்யப்படும் போது இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையான அரிசி 1 கிலோ ரூ.3, கோதுமை 1 கிலோ ரூ.2 எனவும் தொகை வசூல் செய்ய வேண்டும். இது வேறு மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் பொருந்தும். மேலும், 01.10.2020 முதல் தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம் மற்றும் வார்டு - ஐ தவிர பிற நியாயவிலைக் கடைகளில் தங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருள்களின் இருப்பினை கண்காணித்து, போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இத்திட்டம் சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருள்களை பெற தங்களது உறவினர்கள் தெரிந்தவர்களை நியமித்து பொருட்களைப் பெற ஏதுவாக உரிய படிவத்தில் அந்நபர்களுக்கான விவரங்களைப் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்நபர் மூலமாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல் ( OTP) மூலம் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வயது முதிர்ந்தோர் மாற்றுத் திறனாளிகளுக்காக அவர்களால் நியமனம் செய்யப்படும் நபர்களிடம் வழங்கப்படும் பொருள்களுக்கு தனியே பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை விரல் ரேகை படிப்பியினால் அங்கீகரித்து ( Bio - metric Authentication ) பொருட்கள் வழங்க வேண்டியது முதல் நிலையாகும். கை விரல் ரேகை படிப்பியினால் அங்கீகரித்து பொருட்கள் வழங்க இயலாதபட்சத்தில், பின்வரும் நடைமுறைகளில் ஏதாவது ஒன்றினை பின்பற்றி பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.
- ஆதார், ஒருமுறை கடவுச் சொல் ( Aadhaar OTP )
- ஆதார் அட்டையினை ஸ்கேன் செய்தல் ( Scanning of Aadhaar card )
- குடும்ப அட்டைதாரரின் பதிவு செய்த அலைபேசிக்கு ஒருமுறை கடவுச் சொல் அனுப்புதல் ( OTP on Registered mobile number of cardholder )
- மின்னணு குடும்ப அட்டையினை ஸ்கேன் செய்தல் ( Scanning of Smart card ) கை விரல் ரேகை படிப்பியினால் ( Bio - metric Authentication ) அங்கீகரிக்கப்பட முடியவில்லை என்னும் காரணத்தால் எந்தவொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கட்டுப்பாட்டுப் பொருட்கள் வழங்கப்படாமல் இருந்துவிடக் கூடாது
எனவே, மேற்கூறிய நடைமுறைகளில் ஏதாவது ஒன்றினை பின்பற்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கட்டுப்பாட்டுப் பொருள்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமமின்றி பொருள்கள் விநியோகம் செய்ய அறிவுரைகளை நியாயவிலைக் பணியாளர்களுக்கு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றி ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை இடர்பாடுகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்படுத்தப்படுவதை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.