சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்களை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா்,பறிமுதல் செய்து,மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவினா் ஆலோசனையின் பேரில் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்புகின்றனா்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்கள் அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை தீவிரமாக கண்காணித்தனர். அவர் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் கூடையில் ஒன்பது அபூர்வ வகை விலங்குகளான, ஆப்பிரிக்கா கண்டத்தில் அடா்ந்த காட்டுப்பகுதியில் காணப்படும்,பறக்கும் தன்மையுடைய அரிய வகை அணில் குட்டிகள் 9 இருந்தன. இதையடுத்து அவரை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர்.
அதோடு சென்னையிலுள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப் பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அந்த விலங்குகளை ஒன்பது அபூர்வ பறக்கும் ரக அணில் குட்டிகளை ஆய்வு செய்தனர். இது ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகமாக இருக்கக் கூடியது அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருக்கக்கூடியது. இதை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறினா்.
தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அரியவகை பறக்கும் அணில்கள் எந்தவித மருத்துவ பரிசோதனையும் இல்லாமல், சர்வதேச வனவிலங்கு பாதுகாப்புத் துறை அனுமதியும் பெறாமல், இந்திய வனவிலங்கு பாதுகாப்புத் துறை அனுமதியும் இல்லாமல் கொண்டு வந்துள்ளதால், இதை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் நோய்க் கிருமிகள் நமது நாட்டில் பரவிவிடும். எனவே இதை உடனடியாக தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதை கொண்டுவந்த பயணியையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கூறினா்.
அதன்படி இன்று இரவு சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானத்தில் அந்த அரியவகை அணில் குட்டிகளையும் அதை கடத்தி வந்தவரையும் சுங்க அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனா். நேற்றும் இது போல் அபூர்வ வகை வெள்ளை முள்ளம் பன்றியும், அபூர்வ வகை குரங்கு குட்டியை கொண்டு வந்ததையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பீப் வேணும்' - ருசி தேடும் மைசூர் வன விலங்குகள்!