முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் நிலை குறித்தும், அதை மூன்றாம் நிலைக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், "தமிழ்நாட்டில் இதுவரை 4,612 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 571 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்குத் தேவையான முகக்கவசங்கள், வெண்டிலேட்டர் கையிருப்பில் உள்ளன. அதிவிரைவாக கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய வசதியாக, ரேபிட் டெஸ்ட் (RAPID Test) கருவிகள் கொள்முதல் செய்வதற்கு, இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.