ரேபிட் கிட்களை கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! - ரேபிட் கிட்களை கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளைத் தரும் ரேபிட் டெஸ்டிங் கிட்களை கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கு குறித்து பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![ரேபிட் கிட்களை கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! Rapid kit procurement from China, HC notice to state and central](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7011011-70-7011011-1588318757274.jpg)
கரோனா தொற்றைக் கண்டறிய 37 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிட்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த கிட்கள் ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் சீனாவைச் சேர்ந்த வொண்ட்ஃபோ நிறுவனமும் ஒன்று.
இக்கருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்குட்படுத்தாமல், கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால், கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர்களுக்கு தடைவிதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்டிங் கிட்களை பயன்படுத்துவதை நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல இக்கருவிகளை தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே, பரிசோதனைக்குப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீனாவிடமிருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்டிங் கிட் உண்மையான பரிசோதனை முடிவுகளைத் தரவில்லை என அமெரிக்கா தெரிவித்ததை மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு குறைபாடுடைய ரேபிட் டெஸ்டிங் கிட்களை திரும்ப அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ரேபிட் டெஸ்டிங் கிட்களளை கொள்முதல் செய்தபோது மருந்து பொருள்கள் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டதா, எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.