சென்னை:தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''2023 – 2024ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகியப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை 40ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்.
இதில் 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3ஆயிரத்து 42 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவிற்கு 98 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் மற்றும் 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் இன்று (ஜூலை 16) வெளியிடப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 6ஆயிரத்து 326 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 1768 BDS இடங்களும் உள்ளன. 7.5 விழுக்காட்டிற்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லுரிகளில் 473 MBBS இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் உள்ளன. இதில், கடந்தாண்டைவிட நடப்பாண்டில் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும், 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 13 என 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 71 மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான 11ஆயிரத்து 475 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கான இடங்கள் 2ஆயிரத்து 150 உள்ளன.