சென்னை: தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும், தன்னிச்சையாக செயல்படும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராகவும், மற்ற மாவட்டங்களில் இதே போன்ற முறைகேடு நடைபெற கூடாது எனவும் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திமுகவுக்கு ஆதரவாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக அதிமுக சார்பில் புகார்!
திமுகவுக்கு ஆதரவாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பெற்றதோடு, வாக்கு எண்ணிக்கையின் போது நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையை நீடிக்க வேண்டும் என்றும், சுமார் 10ல் இருந்து 50 வரை வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் திமுக- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இருக்கின்றபோது திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்க பெற்றிருப்பதாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்து இருக்கிறது.
கடந்த வாரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தோம் அதில் நாங்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதிமொழி கொடுத்ததின் அடிப்படையில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால், அந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விடுகின்ற விதமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கை இருக்கின்றது. இதேபோன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட மற்ற மாவட்டங்களிலும் நடந்துள்ளதாக நாங்கள் அறிகிறோம்.
ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னுடைய பதவியை மறந்து திமுகவின் மாவட்ட செயலாளர் போல நடந்து கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும் உயர் நீதிமன்றம் இந்த தேர்தலை நியாயமான நேர்மையான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவரின் இத்தகைய நடவடிக்கையானது எங்களுக்கு மிகுந்த அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உடனடியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை இந்த மாவட்ட தேர்தல் பொறுப்பிலிருந்து விடுவித்து பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இந்தத் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது உடனடியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும், இல்லை என்று சொன்னால் எங்களுக்கு நீதிமன்றத்தை நாடுவது தவிர வேறு வழி இல்லை என்று மனு அளித்து இருக்கிறோம். அந்த மனுவை முழுவதுமாக படித்து பார்த்த தமிழக மாநில தேர்தல் அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார்.
TAGGED:
admk