சென்னை:தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர், கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவா்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனா். மேலும் அவா்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மீனவர்கள், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனா். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
தொடர்ந்து மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து, இலங்கை அரசுடன் பேச ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இம்மாதம் 12 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டு மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்தது.