தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2021, 9:26 PM IST

ETV Bharat / state

'கூட்டணி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார்'

சென்னை: கூட்டணி குறித்தும், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்தும் முடிவை ராமதாஸ் விரைவில்  அறிவிப்பார் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

'கூட்டணி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார்'
'கூட்டணி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார்'

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடமிருந்து விருப்பமனுக்கள் பெறப்படும் நிகழ்வு சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் இன்று (பிப்.23) தொடங்கியது. விருப்ப மனுக்கள் இன்று முதல் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5 ஆயிரமும், அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என பாமக அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பாமக நிர்வாகிகள் பலர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்களின் விருப்ப மனுக்களை தியாகராய நகர் அலுவலகத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி முன்னிலையில் சமர்ப்பித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே மணி, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் விருப்ப மனுக்களை அளிக்கவுள்ளனர்.

கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் முடிவெடுக்க மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் கூட்டணி குறித்து முடிவை விரைவில் அறிவிப்பார். வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் ராமதாஸ் முடிவை அறிவிப்பார். சட்டப்பேரவைத்தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தெரியவரும்.
தேமுதிக - பாமக கூட்டணியில் எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை. சமூக வலைதளங்களில் தேமுதிக பாமக கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை என வெளியான தகவல் தவறு என எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். நாங்களும் பல்வேறு தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறோம். எனவே, எங்கள் கூட்டணியில் முரண் ஏதும் இல்லை.
நாடாளுமன்றத்தேர்தலின் போது பாமக சார்பில் வலியுறுத்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. சில கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. அரசு செய்த நலத்திட்டங்களை பாமக பாராட்டியதும் உண்டு, குறைகளை சுட்டிக்காட்டியதும் உண்டு.

முதலமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியது. விவசாயக் கடன் தள்ளுபடி, குடிமராமத்துப் பணிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எனப் பல்வேறு வரவேற்கத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை பாமகவிற்கு உள்ளது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details