அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்த சட்ட மசோதா நிலுவையில் உள்ளது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் சாடி ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், “மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமியற்றி 32 நாள்களாகியும் இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம்!
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா அல்லது ஆளுநர் ஆட்சியா என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று (அக்.16) இது குறித்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், இது குறித்த சட்ட மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :'உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது' நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!