இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் , “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 19 வகையான உயர்சிறப்பு படிப்புகளில் 334 இடங்கள் உள்ளன. 2017ஆம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழ்நாடு அரசு நிரப்பி வந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டு முதல் இந்த இடங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது.
தமிழ்நாடு மருத்துவர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு
அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் ஒன்றியஅரசு ரத்து செய்துவிட்டது. அதனால் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பெரும்பான்மையான இடங்களை பிற மாநில மருத்துவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர். அதனால் தமிழ்நாடு மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் உயர்சிறப்பு மருத்துவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மருத்துவர்கள், படிப்பை முடித்த பிறகு இரு ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று பத்திரத்தில் எழுதி வாங்கப்படுகிறது.
அதன்படி பணி செய்ய மறுக்கும் மருத்துவர்களிடமிருந்து இழப்பீடாக ரூ.40 லட்சம் வரை வசூலிக்க முடியும். ஆனால், அதை மதிக்காத பிற மாநில மருத்துவர்கள் உயர்சிறப்பு மருத்துவப் படிப்பை முடித்தவுடன் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள மருத்துவமனைகளில் பணியாற்றத் தொடங்கி விடுகின்றனர்.
உயர்சிறப்பு மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2017ஆம் ஆண்டு டி.எம்., எம்.சி.எச் போன்ற உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு கலந்தாய்வு கடந்த ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது. அதில் உயர் சிறப்பு மருத்துவப் பட்டம் பெற்ற 280 வெளிமாநில மருத்துவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை.
அதன்மூலம் அவர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்ய விரும்பவில்லை என்பதை தெரிவித்திருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் நரம்பியல், இதயநோய்ப் பிரிவு,புற்றுநோய், சிறுநீரகவியல் உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகளில் மருத்துவம் அளிக்க உயர்சிறப்பு மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டும் .
உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த சில ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற உயர்சிறப்பு மருத்துவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதற்குக் காரணம் உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடந்த 2017ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மாற்றம் தான்.
சிறப்பு ஒதுக்கீடு இல்லை
2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசால் நிரப்பப்பட்டன. மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவமனைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் பணியாற்றிய மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு படித்த அரசு மருத்துவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதால், அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை உயர்சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதே கிடையாது.