சென்னை:இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 273 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது திட்டமதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆகும்.
குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்கும் மத்திய அரசு, தமிழகத்தை மட்டும் வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகரின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருக்கிறது. திட்டப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான், கடந்த 2020 நவம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
அதன்பின் மூன்றாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு மொத்தம் 7 முறை கடிதம் எழுதியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மெட்ரோ திட்ட மதிப்பில் 15 விழுக்காட்டை பங்கு முதலீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், 10 சதவீத தொகையை மட்டுமே மானியமாக வழங்குவதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்த சிக்கலில் கருத்தொற்றுமை ஏற்படாததும், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிப்பது தாமதமாவதற்கு ஓர் காரணமாகும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 3 ஆண்டுகளாகியும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும், நிதி ஒதுக்கவும் மத்திய அரசு மறுப்பது சரியல்ல.