கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம்:
”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான திட்டங்களில் ஒன்றான சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிடப்போவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்திருக்கிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வணிக நலனை மட்டும் மனதில் கொண்டு கிழக்கு கடற்கரை தொடர்வண்டிப்பாதை திட்டம் கைவிடப்படுவது ஏற்க முடியாததாகும்.
பாமக - அரங்க. வேலு:
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து தென்கோடி கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரையை ஒட்டிய வகையில் தொடர்வண்டிப் பாதை அமைக்க வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு ஆகும். அந்தக் கனவை நனவாக்கும் வகையில்தான் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு தொடர்வண்டித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தபோது, சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை 178 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக 523 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்காக கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காரைக்குடியிலிருந்து இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிமீ புதிய பாதை அமைக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
பியுஷ் கோயல் மறுப்பு:
கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை முதல் கடலூர் வரையிலான பாதை அமைக்கப்படும் என்றும், காரைக்குடி-கன்னியாகுமரி புதிய பாதையில் லாபம் ஈட்ட இயலாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாகவும் தொடர்வண்டித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.
கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அத்திட்டத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி, திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப அடிப்படையில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. திட்டமிடப்பட்டவாறு பணிகள் தொடங்கப்பட்டிருந்தால், கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை எப்போதோ அமைத்து முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்வதற்கு பதிலாக, காரைக்குடி - கன்னியாகுமரி இடையே பாதை அமைப்பதற்காக செய்யப்படும் முதலீட்டிற்கு ஏற்ற வகையில் வருமானம் கிடைக்காது என்பதையே மீண்டும் மீண்டும் கோரி இத்திட்டத்தைக் கைவிடுவதில் தான் அரசு உறுதியாக உள்ளது.