சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மலைபோல நம்பிக் கொண்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவால் அந்த நம்பிக்கை சிதைந்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை கூட வேண்டும், அவற்றின் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்று ஆணையிட்ட உச்சநீதிமன்றம் இதைத் தவிர்த்து காவிரி பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டது.
இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றின் ஆணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை அல்ல.
காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரண்டுமே நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்படவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இடர்பாட்டுக்கால நீர்ப்பகிர்வு முறைப்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு ஆணையிட இரு அமைப்புகளும் தவறி விட்டன என்பது தான் தமிழ்நாட்டின் குற்றச்சாட்டு ஆகும்.
தமிழ்நாட்டுக்கு, காவிரியில் வினாடிக்கு 10000 கன அடி வீதம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆணையிட்டிருந்தது. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் கருகிக் கொண்டிருக்கும் குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற இது போதாது என்றும், வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரி தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.