சென்னை:சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது. அதனால், அப்பகுதிகளில் வாழும் மக்கள், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை உடனடியாக கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் பணிகளி மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறித்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு என பல வழிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.
மழை நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் களத்திற்குச் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியான போதிலும், களத்தில் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், அவர்களின் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாலும், மற்ற பகுதிகளை மாநகராட்சியோ, அமைச்சர்களோ கண்டுகொள்ளவில்லை.