சென்னை: இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (டிச.26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
கர்நாடக வணிகத்தில் கன்னடமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஒரு மாநிலத்தில், குறிப்பாக மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில், பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
பெங்களூருவுடன் தமிழ்நாட்டையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும்போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில்தான் உள்ளது. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும், ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.