நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்த சிபிஎஸ்இ வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தலாம் என்று அலுவலர்கள் அறிவித்திருப்பதும், அதற்கான ஏற்பாடுகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. கரோனா பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சிபிஎஸ்இ பிடிவாதம் காட்டுவது நியாயமல்ல.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மே முதல் வாரத்திலும், 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மே மாதம் இரண்டாம் வாரத்திலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுவதற்கு, கடந்த வாரம் வரை மாணவ, மாணவிகள் தயாராகவே இருந்தனர். ஆனால் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்திருப்பதால் மாணவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் தேர்வு எழுதும்போது கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவும் வேகம், முதல் அலை பரவல் வேகத்தைவிட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எடுத்துரைத்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. எந்த நிகழ்விலும் 100 பேருக்கும் கூடுதலாக கலந்து கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. 100 பேருக்கும் மேல் ஓரிடத்தில் ஒன்று கூடினால் கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ள நிலையில், தேர்வு மையங்களில் பலநூறு மாணவ, மாணவிகளை ஒன்றாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பது எந்த வகையில் நியாயம்? மாணவர்களுக்கு மட்டும் கரோனா தொற்றிக் கொள்ளாதா?