சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கைில் கூறியிருப்பதாவது, "கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்திவிட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 12ஆம் நாள் வரை விநாடிக்கு 5ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், இவை எதையுமே மதிக்காமல் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற அடுத்த 20 நாள்களுக்கு குறைந்தது ஒரு டிஎம்சி வீதம் 20 டிஎம்சியாவது தண்ணீர் தேவை. கர்நாடக அணைகளில் 64 டிஎம்சி தண்ணீர் இருக்கும் நிலையில், அம்மாநில அரசு நினைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கி குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், உள்ளூர் அரசியலுக்கு அஞ்சியும், தூண்டிவிடப்பட்டு நடக்கும் போராட்டத்திற்கு பயந்தும், சிறிதும் மனித நேயமின்றி தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.