சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (நவ.3) முதலமைச்சர் ஸ்டாலினை பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க. வேலு, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் சந்தித்து ராமதாஸ் எழுதிய கடிதத்தை அளித்தனர்.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
ஸ்டாலினுக்கு மடல் எழுதிய ராமதாஸ்
முதலமைச்சருக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, "சமூக நீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட வன்னியர் மாணவர்களின் நலனைக் காப்பது குறித்து, தாங்கள் ஆலோசனை நடத்தியிருப்பதும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டிருப்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக, கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பது தான்.
சட்டநாதன் ஆணையத்தின் விவரம்
தமிழ்நாட்டில் மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமுதாயம் வன்னியர்கள் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வன்னியர் சமுதாயத்தினருக்கும், பட்டியலினத்தவருக்கும் சமுதாயப் படிக்கட்டு நிலையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, மற்ற வகையில் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்த வன்னியச் சமுதாயத்தினர் தெரிவித்தனர்.
நாங்கள் பார்வையிட்ட தென் ஆற்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஊர்களில் நெரிசலாக, அழுக்கடைந்த தோற்றத்துடன் வன்னியர்கள் வாழ்வதையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில இடங்களில் பெரும் நிலவுடைமையாளர்களைச் சார்ந்து இருப்பதையும் கண்டோம்.
முக்கியமான குடியிருப்புகளின் வீதிகளில் இவர்களுடைய மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் காண முடியும். இத்தகைய சூழல்களில் பிள்ளைகளின் கல்வி துன்பத்துடன் புறக்கணிக்கப்படுகிறது. பள்ளியிலிருந்து நின்று விடுவதும் மிகவும் சாதாரணமாகி விடுகிறது என்று வன்னியர்களின் வாழ்க்கை நிலை குறித்து சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புள்ளிவிவரங்களுக்காக சமூக நீதி மறுப்பு
தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயத்திற்கு, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, சமூக நீதி மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல. அத்துடன் இட ஒதுக்கீட்டால் எந்தெந்த சமுதாயங்கள் பயனடைந்துள்ளன, எந்தெந்த சமுதாயங்கள் பயனடையவில்லை என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதை ஒரு தொடர் நடவடிக்கையாக அரசு மேற்கொள்ள வேண்டும்.