சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்ட ராமமூர்த்தி அக்கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் உழைத்தார்.
1990-களின் பிற்பகுதியில், காங்கிரசிலிருந்து மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதால், காங்கிரஸ் வலுவிழந்து இருந்த நிலையில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தினார். காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். தாம் வகித்த பதவிகள் அனைத்துக்கும் நேர்மையாக இருந்து சிறப்பு சேர்த்தவர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தால் கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும் தொடர்பு வைத்திருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். திண்டிவனம் வரும் போதெல்லாம் என்னை சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவர் மீது எனக்கும் அன்பும், மரியாதையும் உண்டு.
திண்டிவனம் இராமமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.