தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாட்காட்டி கூட தெரியாத அவலம்: ராமதாஸ் அறிக்கை! - ETV Bharat Tamil

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்த கற்றல் கட்டமைப்பை வலுப்படுத்துங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நாட்காட்டி கூட தெரியாத அவலம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நாட்காட்டி கூட தெரியாத அவலம்

By

Published : Dec 6, 2022, 6:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்த கற்றல் கட்டமைப்பை வலுப்படுத்துங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 3ஆம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்துகொள்ள முடிகிறது. 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாடு மாணவர்களின் கற்றல் குறைபாடு நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்னை தான் என்றாலும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கவலையளிக்கிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்திய அடிப்படை கற்றல் குறித்த ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் 86 ஆயிரம் மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 336 பள்ளிகளைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்பட்டன.

அதில் 20 சதவீதம் மாணவர்களால் தான் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது. சுமார் 50 சதவீதம் மாணவர்களால் தமிழை பிழையில்லாமல் படிக்கக் கூட முடியவில்லை என்று தெரியவந்துள்ளது. கேரளம், கர்நாடகத்தில் 44 சதவீதம் மாணவர்களாலும், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் 45 சதவீதம் மாணவர்களாலும் தாய்மொழியை நன்றாகப் புரிந்து கொள்ளவும், படிக்கவும் முடியும் நிலையில், தமிழ்நாடு மாணவர்கள் மட்டும் தான் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

நாட்காட்டி கூட தெரியாத நிலை:அதேபோல், தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 52 விழுக்காட்டினருக்கு நாள்காட்டியில் நாள், கிழமை, மாதம் ஆகியவற்றைக் கூட அடையாளம் காணமுடியவில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கணிதத் திறனிலும் பிற தென் மாநிலங்கள் தமிழ்நாட்டை விட உயர்ந்த நிலையில் உள்ளன.

தமிழ்நாடு மாணவர்களின் கற்றல் திறன் இப்போது திடீரென குறைந்துவிடவில்லை. பல ஆண்டுகளாகவே இந்த நிலை தொடருகிறது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆசர் எனப்படும் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயின்ற மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 17.70 சதவீதத்தினரால் மட்டும் தான் இரண்டாம் வகுப்புக்கான தமிழ்ப் பாடங்களைப் படிக்க முடிந்தது.

2018ஆம் ஆண்டில் இந்த விகிதம் 10.20 சதவீதமாக குறைந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாகப் பயிலும் சில மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் மோசமாகவே இருக்கிறது என்பது தான் பல்வேறு ஆய்வுகளின் முடிவு ஆகும்.

கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான். ஆனால், அந்த அதிசயம் பெரும்பாலான காலங்களில் நடைபெறுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை.

இயல்பாகவே கற்றல் திறன் அதிகமாக உள்ள மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறுகின்றனர். ஆனால் பள்ளிகள் அவர்களுக்கானவை மட்டும் அல்ல. 10 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தடுமாறும் மாணவர்களை 60 சதவீதம் எடுக்கும் நிலைக்கு முன்னேற்றுவதும், 50 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை 90 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை எடுக்கும் நிலைக்கு உயர்த்துவதும் தான் அரசுப் பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு கல்வியில் சிறக்கும்.

வலுவான கற்றல் கட்டமைப்பு இல்லை: ஆனால், தமிழ்நாட்டு பள்ளிகள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. இதற்கான முதன்மைக் காரணம் கற்றல் கட்டமைப்பு வலிமையாக இல்லாததும், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தான்.

அண்மையில் தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றின் படி 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்.

தொண்டு நிறுவனம் மட்டும் போதாது: மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை மட்டுமே போதாது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும்.

அதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தை ஓர் இயக்கமாக கருதி தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:காவி உடை,நெற்றியில் விபூதியுடன் அம்பேத்கர்: குருமூர்த்தி கைது - திருமாவளவன் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details