இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நந்தினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கில் இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக, 161ஆவது சட்ட விதியின் கீழ் இறுதி முடிவை எடுப்பார் என உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில், 'பெல்ட் வெடிகுண்டு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தக் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி’ உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளனுக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இதுகுறித்து கூடுதல் பதில் அளிக்க சிபிஐ, மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.