முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்," மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க, தமிழ்நாடு அமைச்சரவை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும் என்றும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
மனுவில் மேலும் மாருராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆளுனர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவை முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தன்னை விடுவிக்கக் கோரி நளினி நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும், இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரே பெண் கைதி நளினி எனவும் குறிப்பிட்டார்.