சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த லதா (36) என்பவரிடம் இரண்டு வயது பெண் குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொடுத்துவிட்டு, டீ கடைக்கு சென்றுவிட்டு திரும்பவரும்போது குழந்தையை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த லதா, ராஜிவ் காந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் மருத்துவமனை முழுவதும் தேடியும் அப்பெண் கிடைக்காததால், குழந்தை பாதுகாப்பு அவசர உதவி எண்ணிற்கு தொடர்புகொண்டு குழந்தையை ஒப்படைத்தனர்.
மேலும், குழந்தைக்கு தீக்காயம் இருந்ததால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துசென்றபோது, ஏற்கனவே இந்தக் குழந்தைக்கு தீக்காயத்திற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக செவிலியர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ நிர்வாகத்திடம் காவலர்கள் விசாரித்தபோது புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (25) என்பவரின் குழந்தை மோனிஷா என தெரியவந்துள்ளது. பின்னர் ரம்யாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டு குழந்தையை ஒப்படைத்தனர்.