சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* ஐக்கிய நாடுகள் பொது சபை உச்சி மாநாட்டில் 193 உறுப்புகள் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 செயல் திட்டத்தின் பகுதியாக 17 நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் 169 குறிக்கோள்கள் உள்ளன.
* பேரிடர்கள் அபாய குறைப்புக்கான சென்டாய் கட்டமைப்பின் 2015-2030க்கு பொதுப்பணி துறையால் கட்டப்படும் கட்டிடங்கள் வளர்திறன், தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றம், பேரழிவுகளை தாங்கும் தன்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது.
* சென்னை தரமணியில் நிறுவப்பட்டு உள்ள ஆய்வகத்தில் சிமெண்ட், இரும்பு, கான்கிரீட் போன்ற பொருட்களின் தரத்திற்கான ஆய்வகச் சோதனை நடத்தப்படுகிறது.
* மாநிலம் முழுவதும் 8 மின் கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
* சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 3 தர கட்டுப்பாட்டு கோட்டங்கள் செயற்பொறியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
* 2022-23 ஆம் ஆண்டு பொதுப்பணி பணியாளர்கள் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பயிற்சிகளால் 160 அமைச்சு பணியாளர்கள் மற்றும் 234 தொழில்நுட்ப பணியாளர்கள் பயனடைந்துள்ளனர்.
*பள்ளிகள், கல்லூரி, கட்டடங்கள் மற்றும் திரையரங்கங்கள் போன்ற பல்வேறு பொது கட்டடங்களுக்கு கட்டமைப்பு உறுதி தன்மை சான்றிதழ் பொது பணித்துறையால் வழங்கப்படுகிறது.
* சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூபாய் 99.98 கோடி மதிப்பீட்டில் 190 'சி' வகை குடியிருப்புகள் கொண்ட பன்மாடி கட்டிடம் கட்டும் பணி செயலாகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் 44,098 கொரோனா படுக்கை வசதிகளில் 37,589 எண்ணிக்கையிலான படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் இணைப்புகள் மிக குறுகிய காலத்தில் பொதுப்பணித்துறையினால் ஏற்படுத்தப்பட்டது.
* பல்வேறு மாவட்டங்களில் ரூ.103.74 கோடி மதிப்பீட்டில் 17 பாரம்பரிய கட்டிடங்களில் பாதுகாப்பு, புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைத்தல் பணிகள் பொதுப்பணி துறையால் செயல் ஆக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
* மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கு பொது நூலக இயக்குனரகத்தின் தேவைகளின் படி ரூ.114 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 2,00,250 சதுர அடி பரப்பு கொண்ட தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் பிரம்மாண்டமான நூலக கட்டிடம் கட்டுமான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.
* சென்னை நந்தனத்தில் எம்சி ராஜா விடுதி வளாகத்தில் புதிய மாணவர் விடுதி கட்டும் பணி ரூ.44.50 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களில் 121 அறைகளுடன் 484 மாணவர்கள் தங்கும் வகையில் புதிய மாணவர் விடுதி கட்டிடம் கட்டும் பணி செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* சென்னை கிண்டியில் கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கு 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய 5,53,376 சதுர அடி பரப்பளவில் அனைத்து வகையான வசதியும் செய்யப்பட உள்ளன.