சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனுவுக்குப் பதிலளித்து தமிழ்நாடு உள் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில் மத்திய உள் துறை அமைச்சகம் தாக்கல்செய்த பதில் மனுவில், தண்டனை குறைப்புத் தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்கத் தகுதியானவர் எனக் கூறி ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.