தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிவாளனுக்கு நிபந்தனை பேரில் பரோல் - Rajiv Assassination

சென்னை: தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு நிபந்தனை பேரில் பரோல்..!
பேரறிவாளனுக்கு நிபந்தனை பேரில் பரோல்..!

By

Published : Sep 24, 2020, 10:45 PM IST

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. அதன்படி விசாரணையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்துவரும் பன்னோக்கு விசாரணை ஆணையம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? விசாரணையில் என்ன முன்னேற்றம் உள்ளது? விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது? பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கைதிகளின் பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க ஆலோசனைகள் வழங்க சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்க கூடாது? எனவும் அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (செப். 24) வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் தரப்பில் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு மீண்டும் மனு அளிக்க வேண்டும். அதை ஒரு வாரத்தில் பரிசீலித்து 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும். பரோலில் செல்லும் பேரறிவாளன் எங்கே தங்க உள்ளார் என்ற தகவலை சிறைத்துறை அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தங்கும் இடத்திலிருந்து எங்கும் செல்லக்கூடாது. தங்கும் இடத்திற்குள்பட்ட காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். பரோல் காலத்தில் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

பரோல் முடிந்ததும் வேலூர் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆஜராக வேண்டும். குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து யாரையும் சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ கூடாது. பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது. எந்தத் தகவலையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள கூடாது. எந்தக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள கூடாது.

மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறும்பட்சத்தில், பரோல் ரத்துசெய்யப்பட்டு மீண்டும் சிறைக்குத் திரும்ப அழைக்கலாம். காவல்துறை தரப்பில் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறை சார்பில் சிறைத்துறை கூடுதல் இயக்குநருக்கு தினமும் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...12ஆம் வகுப்பு மறுதேர்வர்களின் முடிவுகள் அக்.10ஆம் தேதி வெளியாகும் - சிபிஎஸ்இ

ABOUT THE AUTHOR

...view details