திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவைத் தொடர்ந்து அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு பொருளாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்கான வேட்புமனுவை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் அவர் அளித்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட்டதால், அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோருடன் சென்று அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர்.