சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த துகளக் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ’சேலத்தில் 1971ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டதாக’ கூறினார்.
இவரது பேச்சுக்கு பல தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. நடிகர் ரஜினிகாந்த் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது காவல் துறையில் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார்.
இதனையடுத்து தனது புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், காவல் துறை கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி புகார் செய்யப்பட்டது.
அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 4ஆம் தேதி உமாபதி வழக்கு தொடர்ந்தார்.