அரசியல் தலைவர்களின் கருத்து
கே.எஸ் அழகிரி:ரஜினியை போன்ற மனநிலை உடையவர்கள் ஒருபோதும் அரசியல் களத்திற்கு வரமாட்டார்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் செய்யமுடியாது, தேர்தல் அரசியலிலும் பங்கேற்கமாட்டார்கள். கடந்த 1996ஆம் ஆண்டு சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதுகூட ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தயங்கினர்.
பீட்டர் அல்போன்ஸ்:அரசியல் வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அமைச்சர் ஜெயக்குமார்:ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கும், கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளை படைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
ரஜினிகாந்த் திமுகவிற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்று வரும் பட்சத்தில் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் அளிப்பார். சிஸ்டம் சரியில்லை என்று கூறியது அதிமுகவை அல்ல.
சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்:பிகார் போன்று அதிமுக எதிர்ப்பு வாக்குகளைக் குழப்பி, ரஜினியை வைத்து தங்கள் ஆதரவை வளர்த்துக் கொள்ளலாம் என, பாஜக சித்து விளையாட்டை ஆடியது.
இதில், ரஜினி சிக்கிக் கொள்ளாமல் தனக்குப் பிரச்சினை வரக்கூடாது என ஒதுங்கிவிட்டார். கரோனா மட்டும் அவர் முடிவுக்குக் காரணமல்ல.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்:ரஜினிகாந்தின் முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். அவர், அரசியலுக்கு வந்தால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்தவர்கள்தான் மகிழ்ச்சியடைவார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்:ரஜினியின் ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சற்று ஏமாற்றமாக இருந்தாலும் என் நண்பன் ரஜினி உடல்நிலை எனக்கு மிகவும் முக்கியம். அவர் எங்கு இருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் . பிரச்சாரம் முடிந்த உடன் அவரை நேரில் சந்திப்பேன்.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினி எடுத்திருக்கும் முடிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவரும் நிலையில், வெளிப்படையாக அது தங்களுக்கு மிகவும் ஏமாற்றம் என பாஜக மட்டும் சொல்லிவருகிறது.
ரஜினியை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கை தாங்கள் உயர்த்திக் கொள்ளலாம் என பாஜக நினைத்ததாகவும், அது படுதோல்வியில் முடிந்ததாகவும், அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், ரஜினி தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தலாம் எனவும் தெரிவிக்கின்றனர். ரஜினிகாந்த் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் உள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், ரஜினிகாந்த் தனது முடிவை மாற்றிவிட்டு அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் நேற்று(டிச.29) போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரஜினியின் இந்த முடிவால் வருங்காலங்களில் சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி தொடங்குவது என்பது சற்று சிரமமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிகாந்த் அதற்குரிய முன்னெடுப்பு எடுக்கும் முன்னரே, கட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் ரஜினியின் உருவம் பதித்த பதாகைகளை வீதியில் எரித்த சம்பவங்களும் சில இடங்களில் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ஆளவிடுங்கடா...! அரசியலும் வேணாம் ஒன்னும் வேணாம்’ - ரஜினி முடிவிற்கு பொதுமக்கள் கருத்து!