சென்னை: கன்னடத்தில் கேஜிஎஃப் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பின், அதிக பட்ஜெட்டில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ள படம் கப்ஸா. ஆர்.சந்துரு இயக்கியுள்ள இப்படத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், சிவராஜ் குமார், ஷ்ரேயா, நயன்தாரா, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ரவி பஸ்னூர் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 17ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் உபேந்திரா, நடிகை ஸ்ரேயா, இயக்குநர் சந்துரு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உபேந்திரா, நேரடி தமிழ் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏற்கனவே பான் இந்தியா படங்கள் வந்துள்ளன. இப்போது தான் பான் இந்தியா என்று போட்டுக்கொள்கின்றனர். இந்திய சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான், அது ரஜினிகாந்த் தான். தமிழில் சத்யம் படத்திற்குப் பிறகு வேறு படம் எதுவும் நடிக்கவில்லை. காரணம் கன்னடத்தில் நிறைய படங்களில் நடிக்கிறேன்.
என்னிடம் கதை சொல்ல எந்தவித தடையும் இல்லை. நானே கதை கேட்கிறேன். ஊடகங்கள் தான் என்னைப் பற்றி தமிழ் இயக்குநர்களிடம் சொல்ல வேண்டும் என்றார்.