சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு குறித்து தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவருகின்றன. இந்தக் குழப்பங்களுக்கு நாளை மறுநாள் (நவம்பர் 30) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நுழைவு குறித்து அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்றுவரை அவர் கட்சித் தொடங்குவதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் முன்பாக ரஜினி கட்சித் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாக உள்ளதுபோலத் தெரிகிறது.
கரோனா பாதிப்பால் கட்சி தொடங்குவது தள்ளிப்போனது என்றும், ரஜினிகாந்த் விரைவில் கட்சித் தொடங்குவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியானது. அதற்கு நடிகர் ரஜினிகாந்த், 'அது என்னுடைய அறிக்கை இல்லை; இருப்பினும் அதில் என் உடல்நலம் குறித்து கூறியிருப்பது உண்மை. எனது அரசியல் வருகை குறித்து மக்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிப்பேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.