பால் முகவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாலையில் பாலை கொட்டி போராடுபவர்கள் சாடிஸ்ட்டுகள் (கொடூரர்கள்), என பால் உற்பத்தியாளர்கள் மீது பகிரங்கமாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் ஆவின் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கொண்டுவரும் பாலினை ஊரடங்கு காரணமாக பால் விற்பனை குறைந்துவிட்டது எனக் கூறி சுமார் 40% முதல் 60% வரை கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் மறுத்துவருகிறது. கரோனா பேரிடர் காலமான தற்போது ஊரடங்கு 5ஆவது மாதத்தை எட்டவிருக்கும் சூழலில் வணிகம் சார்ந்த பால் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளிடையே நேரிடையான பால் நுகர்வு என்பது கணிசமாக அதிகரித்துள்ளது.
மாட்டின் மடியிலிருந்து கறந்த பாலினை 6 மணி நேரத்திற்குள் பதப்படுத்தியாக வேண்டும், இல்லையென்றால் அந்தப் பாலில் கிருமிகள் சேர்ந்து கெடத் தொடங்கி விடும் அல்லது பதப்படுத்தாமல் நேரம் கடந்த பாலினை மக்கள் அருந்தினால் அது பல்வேறு உடல் உபாதைகள் வருவதற்கு வழிவகுத்துவிடும். இதனால் வேறு வழியின்றி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.