சென்னை:அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜிவ் கவுடா சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாட்டில் விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை பெரும் பிரச்னையாக உள்ளன. இவற்றை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற உள்ளது.
2014ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூபாய் 71ஆக இருந்த பெட்ரோல் விலை 2022ஆம் ஆண்டு லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலை 40 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மே 2014 அன்று கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 140 டாலர்கள் என்று விற்பனையானது. இருந்தபோதிலும் எங்கள் ஆட்சியில் 70 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டது.
ஆனால், மோடி ஆட்சியில் 40 டாலர்களுக்கு கச்சா எண்ணெய் கிடைத்தபோதிலும் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை. ஏழைகள் பயன்படுத்தும் உணவு தானியங்கள், தயிர், மோர் போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக கடந்த 2019ஆம் ஆண்டு வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பெருமையாக கூறினார். ஆனால், சாமானிய மக்கள் பயன்படுத்தும் அந்த பொருட்களுக்கு இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளனர்.
பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு காங்கிரஸ் காலத்தில் வாங்கிய ஆயில் பாண்டுகள் தான் காரணம் என்று தொடர்ந்து இந்த அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சுமத்திவருகின்றனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட ஆயில் பாண்டுகள் மீதான பணத்தை நாங்கள் திருப்பிச்செலுத்திவிட்டோம். பெட்ரோலியப்பொருள்கள் விலை உயர்வால் உணவு தானியங்கள் விலை உயர்கின்றது.