சென்னை:முன்னதாக நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் 26ஆவது ஆளுநராக கடந்த 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 16ஆம் தேதி, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2021, செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அவர் பேசும் கருத்துக்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசு பொருளாக மாறி வருவது வழக்கம். குறிப்பாக ஆளுநரின் நடவடிக்கைகள், மேடை பேச்சுகளை தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து பதிலளித்து வந்தனர்.
அண்மையில் ஆளுநர் தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருப்பதாக கூறியது, தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பலர் எதிர்ப்புகளும், விமர்சனஙகளும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் (ஆளுநர் மாளிகை), விநாயகர் சதுர்த்தி விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவருடைய மனைவி லட்சுமி ரவி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ராஜ்பவன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநராக பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்ததற்கு அவருடைய முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து 2 ஆண்டு பணி நிறைவை குறிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நட்டு வைத்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலம்!