சென்னை:சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 17-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னில் விக்கெட் ஆக, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகளை விரட்டி 38 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பிறகு வந்த கேப்டன் சஞ்சு ஜடேஜாவின் சுழலில் சிக்கி டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் அஸ்வின் 30 ரன்னில் அவுட் ஆனார். 36 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த தொடக்க வீரரான பட்லர் 52 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசிய ஷிம்ரோன் ஹெட்மியர் 30 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றனர். அவருடன் ஜோடியில் இருந்த துருவ் ஜூரல் (4 ரன்), ஜேசன் ஹோல்டர் (0), ஆடம் சம்பா (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி எட்டு விக்கெட்கள் இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதனால், சென்னை அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மொயீன் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் 176 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியை துரத்திய ரஹானே 31 ரன்களுடன் அவுட் ஆனார். சிவம் துபே (8 ), மொயீன் அலி (7 ), ராயுடு (1) ஆகியோர் சொற்ப ரன்னில் விக்கெட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கடைசி வரை களத்தில் போராடிய தோனி – ஜடேஜா இணை பவுண்டரி சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றனர்.