இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கியதுடன், விதி மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகனத் திருத்த மசோதா மக்களவையில் ஜூலை மாதம் 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் கடுமையான முறையில், நாடு முழுவதும் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காரணமானவருக்கு 5 லட்சம் ரூபாய் வரையும், படுகாயம் ஏற்படுத்தினால் இரண்டரை லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஐந்தாயிரம் ரூபாயும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் அதிகமாக விதிக்கப்பட்டது. அபராதத் தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் தற்போது விதிகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இதனை முறையாக நடைமுறைப்படுத்தி சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்ததில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு போன்று பல்வேறு மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றார்.