தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜீவஜோதி கணவர் கொலை: ராஜகோபால், ஜனார்தனன் சிறையில் அடைப்பு! - savana bavan owner jailed

RAJAGOPAL

By

Published : Jul 9, 2019, 2:45 PM IST

Updated : Jul 9, 2019, 9:34 PM IST

2019-07-09 14:38:13

சென்னை: ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், ஜனார்தனன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சரவணபவன் உணவகத்தின் உரிமையாளர் ராஜகோபால். இவர் தனது உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவரின் மகளான ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்ய விரும்பினார். எனவே திருமணத்திற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமாரை, 2001ஆம் கூலிப்படையை வைத்து ராஜகோபால் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம், 2004ஆம் ஆண்டு ராஜகோபாலை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

அத்தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபால் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கொலை குற்றத்தை கருத்தில் கொள்ளாமல் தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், தண்டனையை உயர்த்தி ராஜகோபால் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட அனைவரும் உச்சி நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர். 10 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஜூலை 7-ஆம் தேதிக்குள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் அனைவரும் சரண் அடைந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், உடல்நிலை மற்றும் சிகிச்சை காரணமாக சரணடைய அவகாசம் வழங்கும்படி ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித்து, உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ராஜகோபால் (73), மேலாளர் ஜனார்தனன் (59) ஆகியோர் இன்று மாலையில் சரணடைந்தனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து 3-வது மாடியில் உள்ள நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாததால், வாகனத்திலிருந்தபடியே சரணடைந்ததற்கான ஆவணங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.

பின்னர், அந்த ஆவணங்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி சரணடைந்தவர்கள் நீதிமன்றத்தில் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டும். உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கமுடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மேலாளர் ஜனார்த்தனன் லிப்ட் வழியாக சக்கர நாற்காலி உதவியுடனும், ராஜகோபால் படிக்கட்டுகள் வழியாக ஸ்ரெச்சர் மூலமாகவும் மூன்றாவது மாடியில் உள்ள நீதிமன்ற அறைக்கு ஒருவர் பின் ஒருவராக கொண்டு வரப்பட்டனர். 

நீதிமன்ற அறைக்கு கொண்டுவரப்பட்ட அவர்களிடம் தங்களின் பெயர், அங்க அடையாளங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீதிபதி சரிபார்த்த பின்னர் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால், மேலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட 11 பேர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 

Last Updated : Jul 9, 2019, 9:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details