சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு இயக்கப்படுகின்ற சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஆர். ராஜகண்ணப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பேருந்துகளில் ஏறி கரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் பார்வையிட்டார்.
ஆய்வுக்குப் பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கரோனா தொற்றைத் தடுக்கவே இந்த முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்புடன் செல்ல போதிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று (மே.22) 391 பேருந்துகளும், இன்று (மே.23) 940 பேருந்துகளும் வெளியூர்களுக்குச் சென்றுள்ளது. சென்னையில் இருந்து நேற்று (மே.22) 18 ஆயிரத்து 746 பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.
இன்று (மே.23) 47 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை இரண்டு நாட்களில் 4 ஆயிரத்து 993 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் பயணித்துள்ளனர். தேவையான அளவு பேருந்துகள் கையிருப்பில் உள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் தயாராக இருக்கிறோம். தற்போது சென்னையில் 468 பேருந்துகள் கையிருப்பில் உள்ளன.
செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் எஸ்.ஆர். ராஜ கண்ணப்பன். கடந்த வருடங்களை ஒப்பிடும்போது, இந்த ஊரடங்கில் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டும் குறைந்த அளவிலான மக்களே வெளியூர்களுக்குச் சென்றிருக்கின்றனர். அதிகாலையில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை அழைத்துச் செல்ல உள்ளூர் பேருந்துகளும் தயார் நிலையில் இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்த தேவை இருக்காது. அது போன்ற தேவை இருந்தால் அதனை செய்துதர நாங்கள் தயார்” என்றார்.
இதையும் படிங்க : காங்கிரசின் தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சித் தலைவராக செல்வபெருந்தகை தேர்வு